மகாவிஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்தபோது கர்வம் கொண்டபோது, அதன் ஓட்டினை சிவபெருமான் அணிந்த தலம். தலத்தின் பெயர் தண்டலை. கோயிலின் பெயர் நீணெறி.
மூலவர் 'நீநெறிநாதர்' சிறிய லிங்க வடிவில் சற்று உயரமான பாணத்துடன் காட்சி தருகின்றார். அம்பிகை 'ஞானாம்பிகை' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.
மூலவர் கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். இக்கோயிலில் துர்க்கை தெற்கு நோக்கி காட்சி தருகின்றார். மேலும் நவக்கிரகங்கள் அனைத்தும் இறைவனது திருமணக் கோலத்தைக் காண ஒரே திசையில் காட்சி தருகின்றனர்.
ஒருசமயம் கோச்செங்கட்சோழனுக்கு தீராத நோய் பீடித்தபோது இறைவனிடம் வேண்ட, எந்த கோயிலில் கல் நந்தி புல்லைத் தின்கிறதோ அங்கு நோய் நீங்கும் என்று கூற, சோழனும் ஒவ்வொரு தலமாகச் செல்ல, இத்தலத்தில் வழிபட்டபோது நந்தி புல் தின்றது. அரசனின் நோயும் நீங்கியது. கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்ட மாடக்கோயில்களுள் இதுவும் ஒன்று.
அரிவட்டாய நாயனார் செந்நெல் அரிசி, மாவடு, செங்கீரை ஆகியவை நைவேத்தியமாக வைத்து வழிபட்டு முக்தி பெற்ற தலம். அவர் பிறந்த ஊராகிய கணமங்கலம் இங்கிருந்து 1.5 கி.மீ. தொலைவில் உள்ளது. தை மாதம் திருவாதிரை அன்று அரிவட்டாய நாயனார் முக்தி பெற்ற நிகழ்வு நடைபெறுகிறது.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|